Jun 06

சம்பியன் தொடர்; ஆஸி.யை துரத்துகிறது சோகம்

சம்பியன் கிண்ணத்தொடரில் குழு ஏ இல் உள்ள  அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிக்களுக்கிடையிலான போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. 

இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. 

அவுஸ்திரேலியர்களின் வேகப்பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது தடுமாறிய பங்களாதேஷ் வீரர்கள் வரிசையாக அரங்கு திரும்பவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் மட்டும் அதிரடியாக ஆடி 95 ஓட்டங்களைப் பெற்று மிச்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரைத்தவிரவும் சஹிப் அல் ஹசன்(29), மிராஷ்(18) ஆகியோரே இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்றனர். ஏனையோர் ஏமாற்றமளிக்க அவ்வணி 44.3 ஓவர்களில் 182ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலிய பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுக்களையும் சம்பா இரண்டு விக்கெட்டுக்களையும் ஹெசல்வூட், ஹெட், கம்மிங்ஸ், ஹென்றிக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 

பதிலுக்கு இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 16ஓவர்களில் ஒருவி;க்கெட்டை இழந்து 83ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையினால் இப்போட்டியும் கைவிடப்பட்டது.

ஏற்கனவே அவுஸ்திரேலியா நியூஸிலாந்து போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.