Aug 17

இரகசியமாக தயாரிக்கப்பட்ட டயானாவின் இரண்டாவது திருமண ஆடை!

இளவரசி டயானாவிற்கு, அவருக்கே தெரியாமல் இரண்டாவது திருமண உடை தயாரிக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “பிரித்தானிய அரச பரம்பரையில் மிகவும் கோலாகலமான முறையில் நடத்தப்பட்ட திருமணங்களில் ஒன்று டயானா – சாள்ஸ்சின் திருமணமே. புனித பவுல் பேராலயத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இளவரசர் சாள்ஸ் மற்றும் டயானா திருமணம் நடைபெற்றது.

இளவரசி டயானாவின் திருமண உடையே அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. டயானாவின் திருமண உடையானது பிரத்தியேக நூலிழையால் தயாரிக்கப்பட்டதாகும். எனினும் தற்போது அந்த உடை தொடர்பிலான முக்கிய விடயம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டயானாவின் திருமண உடையை வடிவமைத்த David மற்றும் Elizabeth Emanuel ஆகிய இருவரும், டயானாவுக்கே தெரியாமல் ரகசியமாக இரண்டாவது திருமண உடையையும் வடிவமைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

முதலில் அவர்கள் வடிவமைத்த உடை தொடர்பில் ஏதேனும் தகவல் வெளியானால், இரண்டாவதாக வடிவமைத்து வைக்கப்பட்டுள்ள உடையை திருமணத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இன்றளவும் பெருமையாக பேசப்படும் டயானாவின் திருமண உடையை விடவும் அவருக்கே தெரியாமல் வடிவமைத்து வைத்திருந்த இரண்டாவது உடையானது டயானாவின் திருமணத்தில் சிறப்பு சேர்த்திருக்கும் என ஆடை வடிவமைப்பாளர் கூறியுள்ளமையானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.