Aug 17

பற்றி எரிந்த கார்கில்.. விரட்டி, விரட்டி வெளுத்த வாஜ்பாய்!

- ராஜாளி

லாகூர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இனி சண்டையில்லை, சமாதானம் என்று கை குலுக்கி கொண்டிருந்த வேளை. அந்நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரபுக்கு மூளைக்குள் பிசாசு குடிகொண்டது. 1999 - ம் ஆண்டின் மே மாதம் கார்கில் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

தரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு நெடிதுயர்ந்திருந்த அந்த சாலை வழியாக பர்வேஷ் முஷாரபின் படைகள் உள்ளே ஊடுருவ தொடங்கியிருந்தன. இந்திய துருப்புகள் காலி செய்துவிட்டு சென்ற அந்த குன்றுகளில் அடைக்கலம் புகுந்தனர் பாகிஸ்தானியர்கள்.

எவ்விதச் சலனமும் இன்றி ஊடுருவி இருந்தவர்கள் ஒரு சுபயோக சுபதினத்தில் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறார்கள். இந்திய வீரர்கள் சுதாரிப்பதற்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவுக்குள்ளும் ஆத்திரத்தை ஊட்டுகிறது.

தகவல் உண்மையென்று அறிந்ததும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவிய எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உடனடியாக அனுப்பி வைக்கிறார் பிரதமர் வாஜ்பாய். அதற்குள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். இந்த ஊடுருவலை "தங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் காஷ்மீர் இளைஞர்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்கின்றனர்.

இதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென சத்தியம் செய்தது பாகிஸ்தான். உங்கள் நாட்டினர் எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று குற்றம் சாற்றிய இந்தியாவுக்கு கிடைத்த பதில் இது. இனிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவர்களை விரட்டி விரட்டி வெளுப்பது என்ற முடிவுக்கு வருகிறது.

ஆப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ஆட்டம் தொடங்கியது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது இந்தியா. 26 மே 1999 அன்று இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க முடியாததால் ஊடுருவியவர்களோடு பாகிஸ்தான் ராணுவமும் யுத்தக் களத்திற்கு வந்து சேர்ந்தது.

இதில் நமது தரப்பில் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு சென்றவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இந்தியாவின் மிக் ரக விமானம் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் ராணுவம். இருப்பினும் வெற்றி இலக்கை இந்தியா எட்டிவிடும் தூரத்தில் இருந்தது. இந்நிலையில் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நவாஸ் போரை நிறுத்தலாம் என்கிறார். காலம் கடந்து விட்டது என்று மறுத்துவிடுகிறார் வாஜ்பாய்.நிலைமை இப்படி நீடிக்க அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரித்தது.

மிரண்டுபோன பாகிஸ்தான் சீனாவிடம் ஓடி அடைக்கலம் தேட இந்தியப் படையோ கார்கில்லை கைப்பற்றியதுடன் பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்தது. மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து அழுத்தம் வர நவாஷ் ஷெரிப் கார்கில்லை நாம் கைப்பற்றியது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே நாம் நமது லட்சியத்தில் வெற்றி பெற்று விட்டோம் எனவே நமது படைகள் அங்கிருந்து வெளியேறலாம் என்று அறிவிக்கிறார்.

இதனையடுத்து ஊடுருவிய இடங்களில் இருந்து வெளியேறுகிறது பாகிஸ்தானின் அத்தனை படைகளும். இப்படியாக 70 நாட்களை கடந்த அந்த யுத்தத்தில் 527 தீரர்களையும், வீரர்களையும் தியாகம் செய்து இழந்தது இந்தியா. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானோ தங்கள் தரப்பில் வெறும் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது. இருந்தாலும் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்ட உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டது வேறு கதை. இப்படியாக பாகிஸ்தானியர்களை விரட்டி விரட்டி வெளுத்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாயை நாம் இன்று இழந்துவிட்டோம்.