Aug 17

வாஜ்பாய் ஆட்சியை கலைத்த ஜெயலலிதா.. ஏன் தெரியுமா.?


1998 ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் மறைந்த அதிமுக தலைவி ஜெயலலிதா. அதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்டவற்றின் காரணமாக படுதோல்வியை சந்தித்திருந்த ஜெயலலிதா, தன் மீதான திமுக அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமென்றால் மத்தியில் வலுவானதோர் இடத்தினை பெற்றிருக்க வேண்டுமென உணர்ந்தே இருந்தார்.

ஆம், அவர் எதிர்பார்த்தது போலவே கோவை குண்டு வெடிப்பு, ராஜீவ் படுகொலை உள்ளிட்ட காரணங்களினால் ஏற்பட்ட திமுகவுக்கு எதிரான அதிருப்தி அலைகளின் காரணமாக சுமார் 16 இடங்களில் வென்றது அதிமுக, அகமகிழ்ந்தார் ஜெ.

ஆனால்,மத்தியில் ஆட்சியமைக்க போதிய இடங்கள் இல்லாமல் போகவே வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஜெயலலிதாவை நாடவேண்டியிருந்தது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட ஜெயலலிதா அதன் பிறகு எண்ணற்ற நிர்பந்தங்களை வாஜ்பாய்க்கு அளிக்க தொடங்கினார்.

அதில், இன்னார் மட்டுமே மத்திய அமைச்சரவையில் இடம் பெற வேண்டும், மாநிலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்க கூடிய திமுக ஆட்சியை கலைத்திட வேண்டும் என்பன முதன்மையானவை.

ஆனால், ஜெயாவின் இந்த சர்வாதிகார போக்குக்கு வாஜ்பாய் இணங்க மறுக்கவே 1999 ஆம் ஆண்டு அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெ.

அதன் பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோற்றது வரலாறு. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாஜ்பாய், என் வாழ்வில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளான நாட்கள், அதிமுகவுடன் கூட்டணி மேற்கொண்டிருந்த நாட்களே என தெரிவித்து சென்றார்.