Aug 17

எனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா? சாட்சாத் வாஜ்பாய்தான்!

"எனக்கு தமிழ் என்றால் எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? தமிழ் என்றால் கொள்ளை பிரியம்" இதை சொன்னது யார் தெரியுமா? சாட்சாத் வாஜ்பாய்தான்.

புதுடெல்லி ரெய்ஸினோ ரோடு! வாஜ்பாய் பதவி விலகிய மறுநாள்! அவருடன் பத்திரிகையாளர் சார்பாக ஒரு பிரத்யேக பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ஒரு முக்கிய கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வி தமிழ் மொழி குறித்துதான். அதற்கு காரணம், மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை சொல்லி வாஜ்பாய் அப்போது பேசியிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் எழுப்பப்பட்ட ஒரு சில கேள்விகளும், வாஜ்பாயின் பதில்களும்தான் இவை.

கேள்வி: மக்களவையில் பாரதியின் கவிதை வரிகளை எடுத்து சொன்னீர்கள்? ஆனால் தமிழகத்தில் நீங்கள் ஒரு இந்தி வெறியர் என்ற கருத்து நிலவுகிறதே, உங்களின் விளக்கம் என்ன?

பதில்: நானா? இந்தி வெறியனா? கிடையவே கிடையாது. பல்வேறு மொழிகளுக்கிடையே நமது விலைமதிக்க முடியாத கலாச்சார மரபுகள் குறித்து நாம் அனைவரும் நியாயமான முறையில் பெருமை அடையவே செய்கிறோம். பாரதியை பற்றி நான் பேச காரணம், நவ இந்தியாவில் மிகப்பெரிய கவிஞர்களில் சுப்பிரமணிய பாரதியும் ஒருவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற விஷயம் குறித்து வெளிப்படுத்தவும், அதை முழுமையான உணர்வுகளில் சொல்லவும், "முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புது ஒன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற பாரதியின் கவிதையை சொல்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. (பாரதியின் இந்த கவிதை வரிகளை இந்தி எழுத்துக்களில் எழுதி வைத்து படித்து காட்டினார் வாஜ்பாய்)

கேள்வி: உங்களுக்கு தமிழ் இவ்வளவு பிடிக்குமா? தமிழ் இலக்கியங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?திராவிட நாகரீகத்தின் அடித்தளத்தில் வளர்ந்த தமிழ்க் கலாச்சார மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் மீது மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு இருக்கிறதா?

பதில்: கண்டிப்பாக. தமிழில் என்னால் பேச முடியாமல் போனாலும் தமிழ் இலக்கியத்தின் வளம் குறித்து எனக்கு நன்றாக தெரியும். பாரதியின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை ஒன்றுவிடாமல் நான் படித்திருக்கிறேன். அப்படி படிக்கும்போது, அவரது படைப்புகளின் ஆழத்தையும், அரும்பெரும் கருத்துக்களையும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு இந்தியனும் நான் உட்பட பழமையும், வளமும் கொண்ட தமிழ்க் கலாச்சாரத்தை பற்றியும் தமிழ் நாகரீகத்தை பற்றியும் பெருமை கொள்வதில் நியாயம் உண்டு.

கேள்வி: நீங்கள் இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் என்றும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்றும் கருதப்படுகிறதே?

பதில்: நாங்கள் முஸ்லீம்களுக்கோ, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சமூகத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட இட ஒதுக்கீட்டை நாங்கள் கண்டிப்பாக வலியுறுத்துவோம். எங்களது இந்த கருத்தை பெரும்பகுதி மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் முயற்சிகளையும் மேற்கொள்வோம். அதன் மூலம் எங்கள் மீதான தவறான அபிப்பிராயத்தை களைய முனைவோம்.

கேள்வி: "வாஜ்பாய் சரியானவர்தான்... ஆனால் அவரது கட்சி தவறானது" என்று பல அரசியல் தலைவர்கள் சொல்கிறார்களே... ஒரு சரியான தலைவரான நீங்கள் தவறான கட்சியை திருத்த முடியாதா?

பதில்: ஒரு மோசமான மரத்திலிருந்து சுவையான பழத்தை பெற உங்களால் முடியுமா? இவ்வாறு அந்த பேட்டியில் வாஜ்பாய் கூறியிருந்தார். உண்மையிலேயே அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு எளிய மனிதர் வாஜ்பாய். எளிமையின் மொத்த உருவமும் வாஜ்பாய்தான். மிக சிறந்த அரசியல் நாகரிகம் மிக்க பண்பாளர். அவையில் அரசியல்வாதிகள் பேசினால் அதில் வெறுமைத்தனம் இருக்ககூடாது, ஒரு பேச்சு பேசினால் அந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்துவிட்டு பேசினால்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதை தீர்க்கமாக வலியுறுத்தியதுடன், அதை தன் கடைசி வரையும் கடைப்பிடித்தார். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட வாஜ்பாயிடம் எப்போது பேசினாலும் கலகலப்புதான்! நகைச்சுவைதான்!