நாட்டின் பெரும்பாலான இடங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயமுள்ளதால் தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுப் பிரிவினால் இன்று ஆரம்பிக்கப்பட்ட டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நாளைய தினமும் மேற்கொள்ளப்படவுள்ளது. 

உயர்மட்ட வைத்திய பரிசோதனை அதிகாரிகளால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரிசோதனை செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதோடு, அதற்கென 764 சுகாதாரக் குழுக்களின் உதவி பெறப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் மேற்படி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் அளவு 70 சதவிதமாக உள்ளதோடு, இது கடந்த வருடம் பதிவுசெய்யப்பட்டதை விடக் குறைவாகும் என தேசிய டெங்கு நுளம்புக் கட்டுப்பட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஜுலை வரையான காலப்பகுதியில் சுமார் 33,000 டெங்கு நோயாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்மாதத்தின் கடந்த 15 நாட்களில் 1870 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடத்தில் ஜனவரி தொடக்கம் ஜுலை வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 28,000 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 22,270 நோயாளர்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தை விட டெங்கு அபாயம் இவ்வருடத்தில் குறைந்துள்ள போதும் தற்போதைய கால நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.