Aug 16

நுவரெலியாவில் 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்று காரணமாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கம்பிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டார்.

ஹட்டன், டிக்கோயா, மாஊசாகலை, மஸ்கெலியா, பட்டிபொல, தவளந்தென்ன, கினிகெத்தேன ஆகிய பகுதிகளில் மின்சார கம்பிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், நிலவும் பலத்த காற்று காரணமாக மின்சார கம்பிகளை இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுலக்ஸன ஜயவர்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.