Aug 16

நல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை!

கனடாவிலுள்ள பாடசாலைகளின் மரபுரிமைத் தினம், மத்திய அரசின் சட்டபூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பாரம்பரிய, பன்முக கலாசார திணைக்களத்தின் உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பன்முக கலாசார, பாரம்பரியங்களைக் கொண்ட மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சுதேச மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அந்தந்த பாடசாலையின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கனடா ஒட்டாவா நகரில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜுன் 21ஆம் திகதியே சுதேச மக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. புதிய அறிவிப்பின் பிரகாரம், அந்தந்த பாடசாலையின் மரபுரிமை தினம் என்று கொண்டாடப்படுகிறதோ, அன்றைய தினம் விடுமுறையை பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, செப்டெம்பர் 30ஆம் திகதி செம்மஞ்சள் சட்டை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. செம்மஞ்சள் சட்டை தினமானது, 1970களில் ஆரம்பிக்கப்பட்ட வில்லியம்ஸ் லேக்கிற்கு அருகிலுள்ள சென் ஜோசப் மிஷன் என்ற சுதேச மக்களின் பாடசாலையின் வரலாற்றைக் கூறும் தினமாகும். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சுதேச மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் கல்வியினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையின் உத்தியோகத்தர்களும் செய்த தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் இத்தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அத்தோடு, பாடசாலைகளின் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.