Aug 16

வானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ

எந்தவித உபகரணங்கள் இல்லாமல் தானாகவே வானில் பறக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கோவையை சேர்ந்த மேஜிசியன் ஒருவர் வானில் எந்தவித உபகரணங்கள் ஏதும் இல்லாமல் தானாகவே பறக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அறிவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இதனை சாத்தியப்படுத்தி உள்ளதாக கூறுகிறார் இந்தச் செயலை செய்த நபர்


கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவர் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் ஷோ நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மேஜிக் போட்டிகளிலும் கலந்து கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், வானில் பறக்கும் செயலை செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.வணிக வளாகத்தில் பொதுமக்கள் மத்தியில் நின்று கொண்டு இருக்கும் இவர், திடீரென அங்கிருந்து மேலே பறக்கிறார். பின்னர் பல மடங்கு உயரத்திற்கு பறப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. எந்தவித உபகரணங்கள் ஏதும் இல்லாமல், அவர் திடீரென மேலே பறந்ததாக கூறுகிறார்.


இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் இதனை முகநூலில் பதிவு செய்தனர். அது சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பறக்கும் வீடியோவை பார்த்து உள்ளனர். அறிவியல்பூர்வமாகவும், மன ரீதியாகவும் இதுபோன்று பறக்க முடியும் எனக் கூறுகிறார் விக்னேஷ் பிரபு. குறிப்பாக தான் இதற்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியில் ஈடுபட்டதாகவும், வானில் பறப்பது இந்தியாவில் இதுவே முதன்முறை எனவும் கூறினார். மேலும் முற்றிலும் பொழுது போக்குக்காகவே இதனை செய்ததாகவும், எனவே இதனை யாரும் ஆராய வேண்டாம் எனவும், யாரும் செய்து பார்க்க வேண்டாம் என கூறுகிறார்.