Aug 16

தமிழர் உரிமைக்காக போராடும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரமே – கோடீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

வி.சுகிர்தகுமார்

என்னை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதேபோல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாரும் வாங்க முடியாது. அவர்கள் என்றும் தமிழினத்திற்காகவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் போராடுகின்றவர்களாவே இருப்பார்கள். அதேபோல் தமிழர் உரிமைக்காக போராடும் ஒரே கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மாத்திரமே என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கழக தலைவர் க.சிவசாந்தன் தலைமையில் அமரர் தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கற்றதில் வென்ற முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் விழா, மற்றும் அமரர் தாமோதரம் சிவகலை ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பரிசளிப்பு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் அபாய நிலை காணப்படுவதாகவும் அவ்வாறான நிலை உருவானால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஆண்டான் அடிமையாக ஏனையவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் எனவும் அவர் கூறினார்.

தன்மானம் மிக்க தமிழன் என்றும் தமிழினத்திற்காகவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் போராடுவான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

 வடகிழக்கிலே வாழும் அனைத்து மக்களும் சுயமாக தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமானால் அரசியல் தீர்வு முக்கியமானதாகும். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலாவது கோரிக்கையும் அதுவாகத்தான் இருக்கின்றது. இரண்டாவது கோரிக்கையே அபிவிருத்தி திட்டம். அந்த வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இரு கோணங்களிலும் தமது பயணத்தை தொடர்கின்றது.

அரசியல் தீர்விற்காக போராடும் நாங்கள் அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் பார்வையாளர் அரங்கிற்காக 15இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பலகோடி ரூபா வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இதற்காக பல தடவைகள் பாராளுமன்றத்தில் விவாதித்துள்ளேன். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் மக்களின் நலனுக்காக அதிக தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள், பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், கல்வித்துறை பரீட்சைகள் மூலம் உயர் பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட கல்விமான்கள் உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர், வலயக்கல்விப்பிரதிக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கும் கழகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 தொடர்ந்து காந்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு காசோலைகளும் வெற்றிக்கிண்ணங்களும் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.அருள்நாயகமூர்த்தி உதவிப்பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்ட அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.