Aug 16

காட்டுத்தீயால் கனடாவில் புகைமூட்டம்! – மக்கள் அவதி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் தொடர்ந்துவரும் காட்டுத் தீயினால் பல பகுதிகளில் புகைமூட்டம் நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக 566 காட்டுத்தீ அனர்த்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால், சுமார் 18,700 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத்தீ பல வாரங்களாக தொடரும் வேளையில் கனடாவின் பல பகுதிகள் மஞ்சள் நிறத்தில் புகை மூட்டமாகத் தோற்றமளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்பேர்டா மாகாணத்திலேயே புகைமூட்டம் அதிகமாகக் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பரவும் புகையானது, சுற்றாடலை மாசுபடுத்துவதுடன் சுவாசத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதென கனடா சுற்றுப்புற சூழல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் பொலம்பியா காட்டுத்தீயானது, இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 377,000 ஹெக்டேயர் காடுகளை எரித்துச் சாம்பலாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.