Aug 16

இத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்!

இத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு மாநில அளவிலான அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், ஜெனோவா நகரம் அமைந்துள்ள Liguria பிராந்திய ஆளுநர் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து நேற்று முதல் இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தபட்டுள்ளதாக பிரதமர் GIUSEPPE CONTE தெரிவித்துள்ளார்.

ஜெனோவாவில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை அவசரமாக கூட்டி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த அவசரகால நிலை எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சம்பவத்தல் 16 பேர் வரை காயமடைந்ததோடு, அவர்களில் 12 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நவீன காலத்தில் இவ்வாறான ஒரு அனர்த்தம் ஏற்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட பிரதமர், இவ்வாறான ஒரு சம்பவம் இனியொருபோதும் இடம்பெறாத வகையில் தமது அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமென குறிப்பிட்டார்.