Aug 16

வெள்ள பாதிப்புக்கு அதிகமான உதவி வேண்டும்: மத்திய அரசிடம் பினராயி வலியுறுத்தல்

கேரளாவில் வெள்ள பாதிப்புகளுக்கு அதிகமான உதவி தேவை என மத்திய அரசை முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது. இந்நிலையில் ,கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை இருக்கும் என்றும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் கேரள மக்களை இது மேலும் அச்சுறுத்தியுள்ளது.இது குறித்து பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:கேரளாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துவருகிறது.

இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும் அதிகமான உதவித் தேவைப்படும், அதை மத்திய அரசு உடனே செய்யவேண்டும், என்றார்.