Aug 16

நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்து - 22 குழந்தைகள் பலி

சூடானின் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 22 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர்.

சூடானில் உள்ள நைல் நதியில் படகு போக்குவரத்து நடக்கிறது. இந்த நதியை கடக்க அப்பகுதியின் கிராமவாசிகள், மரப்படகுகளை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சூடானின் கார்டோமின் வடக்குப்பகுதியில் நைல் நதியில் நேற்று காலை 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது நதியின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நீரில் மூழ்கி 22 குழந்தைகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். சில குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் மாயமாகியுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்தனர். இந்த படகு விபத்தில் பெண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நதியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக படகு கவிழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.