Aug 16

300 அமெரிக்க பாதிரியார்கள் மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், சுமார் 300 பாதிரியார்கள் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகத் தெரிவிக்கும் நடுவர் குழு அறிக்கை ஒன்றை அந்த மாநில உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ஆறு மறைமாவட்டங்களில் கடந்த 70 ஆண்டுகளில் 1000க்கும் அதிகமான சிறுவர்கள் துஷ்பிரகோத்திற்கு ஆளாகி இருப்பதாக நடுவர் குழுவின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திருச்சபை திட்டமிட்ட வ கையில் மூடிமறைப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

18 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த விசாரணைகளில், “திருச்சபையின் சொந்த ஆவணங்களில் இருந்தே பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை கண்டறிய முடிவதாக” நடுவர் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பலரின் தகவல்கள் காணாமல்போனதாலும், சம்பவம் குறித்துப் புகார் செய்ய பலர் முன்வரத் தயங்கியதாலும் தற்போதைய எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை தொடர்ந்தால் மேலும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். குற்றங்களைப் புரிந்த பெரும்பாலான பாதிரியார்கள் காலமாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.