Aug 15

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்! – ஸ்பெயின் தெரிவிப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் கோரிச் செல்லும் அகதிகளில் ஒரு தொகையினரை ஏற்றுக்கொள்ள மோல்டா சம்மதித்துள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 6 நாடுகள் இணைந்து 255 அகதிகளை தமது நாடுகளுக்குள் அனுமதிக்க சம்மதித்துள்ளன.

ஸ்பெயின் பிரதிப் பிரதமர் கார்மென் கல்வோவின் தகவலின் பிரகாரம், 255 புகலிடக் கோரிக்கையாளர்களை தாங்கிய கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஸ்பெயின் 60 புகலிடக் கோரிக்கையாளர்களையும், பிரான்ஸ் 60 புகலிடக் கோரிக்கையாளர்களையும், ஜேர்மனி 50 புகலிடக் கோரிக்கையாளர்களையும், போர்த்துக்கல் 30 புகலிடக் கோரிக்கையாளர்களையும், லக்ஸம்பேர்க் 5 புகலிடக் கோரிக்கையாளர்களையும், மோல்டா 50 புகலிடக் கோரிக்கையாளர்களையும் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக ஸ்பெயினின் பிரதிப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இத்தாலியின் உட்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரி மத்தியதரைக் கடலின் ஊடாக பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களில் 629 பேரை கடந்த ஜூன் மாதம் ஸ்பெயின் ஏற்றுக்கொண்டது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கையை இத்தாலியும் மோல்டாவும் இறுக்கமாக்கியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக நடுக்கடலில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தத்தளித்து வந்தனர். இதன் பின்னணியில் ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள், அகதிகளை தரையிறக்க சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.