Aug 15

'மோடி வாழ்த்து கூறியதால் பாக்.,குடன் உறவு மேம்படும்'

பாக்.,கில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவருமான, இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது, 'இரு நாடுகள் உறவில் நேர்மறை வளர்ச்சியை ஏற்படுத்தும்' என, பாக்., துாதர் கூறியுள்ளார்.

அண்டை நாடான, பாக்.,கில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில், தெஹ்ரீக் - இ - இன்சாப்

கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன், 18ல், பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார்.

இம்ரானுக்கு, ஜூலை, 30ல், பிரதமர் மோடி, தொலைபேசியில் வாழ்த்து கூறினார். இரு நாடுகளின் சுதந்திர தினத்தையொட்டி, நேற்று முன்தினம், இந்தியாவில் உள்ள சிறைகளில் அடைபட்டுள்ள, ஏழு பாகிஸ்தானியர் விடுதலை செய்யப்பட்டனர். 

கடந்த ஒரு வாரத்தில், 21 பாக்., கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பாக்., சிறைகளில் இருந்து, 27 மீனவர்கள் உட்பட, 30 இந்தியர்களை, அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாக்., துாதர், ஷோஹைல் மஹ்மூது பேசியதாவது: தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர், இம்ரான் கானுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து கூறியது, இரு நாட்டு உறவில் நேர்மறை விளைவை ஏற்படுத்தும். இதனால், இரு நாடுகள் இடையிலான உறவு மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.