Aug 15

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை - தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

உரிய சட்ட திருத்தம் செய்யாதவரை நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோரிக்கை தொடர்பாக 2015-ம் ஆண்டு முதலே இதற்காக தேவைப்படும் 100 சதவீத ஒப்புகைச் சீட்டு எந்திரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தேர்தல் கமிஷன் தனது கருத்தை தெரிவித்து வருகிறது. இதர தேவைகளான கூடுதல் போலீஸ் படை, தேர்தல் அதிகாரிகள் நியமனம் பற்றியும் தெரிவித்து உள்ளது.

மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைப் பொறுத்தவரை சில மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களின் சட்டசபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவேண்டியும் இருக்கும். இதற்கு உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

இதுபோன்ற நிலையில் உரிய சட்ட திருத்தங்கள் செய்யாத வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. அதேநேரம் பதவி காலம் முடியும் சட்டசபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.