Aug 14

8 வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் / பிரதமருடன் கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான எட்டு வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நேற்று நள்ளிரவு எட்டு வாடிகள் எரிக்கப்பட்ட நிலையில் , அப்பகுதி மீனவர்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் , அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களுக்கு நீதியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா என எமது செய்திப் பிரிவு மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன் , மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாற்று வழிகள் செய்து கொடுக்கப்படுமா எனவும் , எமது செய்திப்பிரிவு தொடர்ந்து வினவியது.

இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா காவற்துறை மா அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் பிரதமரிடம் கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.இதேவேளை , இந்த சம்பவம் தொடர்பில் மூன்று வௌி மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.