Aug 14

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி

நியூ பிரவுன்ஸ்விக் தலைநகர் Fredericton பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினரையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று(திங்கட்கிழமை) சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ள பிரதமர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.

இதன்போது அவர்களது துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், அவர்களது இழப்பின் சோகங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான கடப்பாட்டில் அந்த இரண்டு அதிகாரிகளும் எவ்வளவு உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான காலத்தில், இந்த முழுச் சமூகமும், முழு நாடும் அவர்களுக்கு துணை நிற்பதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், உயிர்நீத்த அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.