செஞ்சோலையில் பாலகர்களை கொன்றுக் குவித்த கொடிய தினம்: மட்டக்களப்பில் நினைவஞ்சலி
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒன்றும் அறியாத பச்சை பாலகர்களை கொன்று குவித்த கொடிய நாள் இன்றாகும்.
இக்கொடிய தினத்தின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்கள் வைத்து உயிரிழந்த சிறுவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌனப்பிராத்தனையும் இடம்பெற்றது.
இதன் நினைவாக மட்டக்களப்பு கொடுவாமடுவிலுள்ள முன்பள்ளி பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு நிதி அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் கடந்த 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.