Aug 14

காதலியுடன் விடுமுறையை களித்த அமைச்சரின் பதவி பறிபோனது!

நோர்வே அரசாங்கத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நோர்வே மீன்வளத்துறை அமைச்சர் பெர் சேன்ட்பேர்க் (வயது-58) பதவி விலகியுள்ளார்.

ஈரானில் உள்ள தனது காதலியான முன்னாள் அழகி பஹாரே லட்னெஸ் (வயது-28) என்பவருடன் கடந்த மாதம் ஈரானில் விடுமுறையை களிக்கச் சென்றுள்ளார். இதன்போது, அமைச்சருக்கு வழங்கப்பட்ட அரச பணிக்கான தொலைபேசியையும் அவர் உடன் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த விடயம் நோர்வேயின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் விடயம் என்பதுடன், அரச நெறிமுறைகளை மீறும் செயற்பாடு எனவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. பஹாரே லட்னெஸ், முன்னாள் அழகுராணி என்பதோடு தற்போது மீனுற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

அத்தோடு, தான் நோர்வே வதிவாளர் எனவும், ஈரானின் இஸ்லாமிய அரசாங்கத்துடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முன்னாள் அழகியின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக நோர்வே புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

நோர்வேயில் எண்ணெய்வளம் மற்றும் எரிவாயுக்கு அடுத்தபடியாக கடலுணவு ஏற்றுமதி பாரிய பங்கினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.