Aug 14

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் - சிமோனா ஹாலெப் சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 4 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், கிவிடோவா (செக் குடியரசு) 2 இடங்கள் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஸ்விடோலினா (உக்ரைன்) 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தையும், கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 2 இடம் சறுக்கி 9-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஜூலியா கோர்ஜெஸ் (ஜெர்மனி) 10-வது இடத்தில் தொடருகிறார்.