Aug 13

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது: 331 பேர் பதவிப்பிரமாணம்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று முதல் முறையாக கூடியது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அவை கூடிய போது முன்னைய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக் புதிய 331 உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமாக 342 ஆசனங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது. இதில் 272 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதம் உள்ள 70 பேர் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதில் 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி 272 தொகுதிகளில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பி.டி.ஐ. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்க உள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி அவர் புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நியமன இடங்களை அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கியுள்ளது. இதன்படி, பி.டி.ஐ. கட்சிக்கு 28 பெண்கள் மற்றும் 5 சிறுபான்மையின உறுப்பினர்கள் என 33 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 14 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகின்றது.

இதுபோல முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) கட்சியின் பலம் 15 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 82 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) பலம் 11 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 53 ஆக அதிகரித்துள்ளது.