Aug 13

மலையகத்தில் கடும் மழை ; மக்களின் வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் சலங்கந்த பிரதான வீதியில் இன்று காலை 6.30 மணியளவில எட்லி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எட்லி தோட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டின் ஒன்றின் ஒரு பகுதி அளவு சேதமடைந்தமையால் அங்கு வாழும் 32 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் ஹட்டன் அலுத்கம பகுதியில் காலை ஏற்பட்ட மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றது..

நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்  மிக வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்படுகின்றது.

தொடர்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கட்டட தொழிலாளர்கள் வேலைகளை மேற்கொள்ள முடியாது பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழைகாரணமாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதுடன், தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளில் கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதனாலும், மலை தொடர் பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.