Aug 13

இரணைமடு குளத்தின்புனரமைப்புப் பணிகள் நிறைவு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிறேம்குமார் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமாக காணப்படும் இரணைமடுக்குளம் கடந்த 1975 ஆம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு வேலைகளே தற்போது முழுமையடைந்துள்ளன.

இந்த புனரமைப்புத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இலகு கடன் அடிப்படையில் 2000 மில்லியன் ரூபாயும், IFAD நிறுவனம் இலகு கடன் அடிப்படையில் 2890 மில்லியன் ரூபாயும் மற்றும் அரசாங்கத்தின் ஒதுக்கீடாக 310 மில்லியன் ரூபாயும் பயன்படுத்தப்பட்டன.

இதன்மூலம் குளத்தின் அணைக்கட்டுப்பகுதி இரண்டு அடியால் உயர்த்தப்பட்டுள்ளதோடு அதனுடன் இணைந்த ஏனைய கட்டுமானங்களும், வான் மற்றும் பாலம் அமைப்பு வேலைகளும், திருவையாறு நீர்ப்பாசன வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் 2013 ஆம் ஆண்டில் 10 வேலைத்திட்டங்கள், 2014 ஆம் ஆண்டு 16 வேலைத்திட்டங்கள், 2015 ஆம் ஆண்டு 40 வேலைத்திட்டங்கள், 2016 ஆம் ஆண்டு 65 வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.