Aug 13

பிரான்சில் பறவைகளுக்கு குப்பை பொறுக்குவதற்காக விசேட பயிற்சி

பிரான்ஸில் உள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக ஆறு புத்திசாலி பறவைகள் பணியிலமர்த்தப்பட்டுள்ளன. ஆறு காகங்களுக்கு சிகரெட்டை சேகரிக்கவும், கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள ‘புய் டு ஃபொ தீம் பார்க்’ என்ற கேளிக்கை பூங்காவிலேயே இந்த அபூர்வ சுத்திகரிப்பு பணியாளர்கள் சேவை புரிகின்றனர். குறித்த காகங்கள் அங்குள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் இடுகின்றன. இதற்கு பரிசாக அவற்றுக்கு சிறப்பு உணவளிக்கப்படும்.

இந்த பூங்காவின் தலைவர் நிகோலஸ் கூறுகையில் “பறவைகளை கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது மட்டும் நம் நோக்கமல்ல. எமது வாடிக்கையாளர்கள சுத்தம் தொடர்பாக கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு இயற்கை சூழலே நமக்கு சுற்றுச் சூழல் தொடர்பாக கற்றுக் கொடுக்கின்றது என்பதை உணர்த்துவதுதான் நம் நோக்கம்” என்று தெரிவித்தார்.

பொதுவாக காகங்கள் மிகவும் புத்திசாலியானவை, அத்துடன் தங்களின் குறும்புத் தனங்களால் மனிதர்களுடன் மிகுந்த நட்புறவை பேணுகின்றன என்றும் பூங்காவின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், பணியில் உள்ள புத்திசாலி காகங்களுக்கு மேலதிகமாக நாளை (திங்கட்கிழமை) மேலும் சில பறவைகளை பணியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.