Aug 13

இலங்கைக்கு 1,080.55 கோடி ரூபாவினை வழங்கியுள்ள இந்தியா!

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவினை வழங்கியுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தெற்காசியாவிலுள்ள ஆறு அண்டை நாடுகளுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் இந்தியா வழங்கியுள்ள அபிவிருத்தி நிதி தொடர்பான புள்ளி விபரங்களை இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கே.சிங் ராஜ்ய சபையில் எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளார்.

இந்தநிலையிலேயே குறித்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2014-15 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரையான நான்கு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கும், 21,100 கோடி ரூபா அபிவிருத்தி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பூட்டானுக்கு 15,680.97 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு 2,232.94 கோடி ரூபாவும், நேபாளத்துக்கு 1,322.54 கோடி ரூபாவும், இலங்கைக்கு 1,080.55 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு 514.13 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 270.39 கோடி ரூபாவும், அபிவிருத்தி உதவியாக வழங்கப்பட்டுள்ளது.