Aug 13

சிரியா ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 39 பேர் உயிரிழப்பு

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 சிறார்கள் உட்பட 39 பேர் உயிரிழந்ததாக போர் நிலைமைகளை ஆராயும் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது.

துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள சர்மாடா நகரில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் களஞ்சியத்தில் பெரும்பாலும் ஆயுத விற்பனையாளர்களின் வெடிப்பொருட்களே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்களை காணவில்லை என போர் கண்காணிப்பாளர்களும், செய்தியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் அருகாமையில் இருந்த இரு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை கனரக வாகனங்களின் உதவியுடன் ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் விபத்தா? அல்லது வன்முறை தாக்குதலா? என்பது குறித்து முதல்கட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வடமேற்கு மாகாணமான இட்லிப்பின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு அரச படைகளுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரால் சுமார் 15 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.