Aug 13

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும், காற்றின் வேகமும் குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும்.

இதனுடன், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.