Aug 11

95 வயதில் குஸ்தி- அசத்தும் பழனி தாத்தா

மதுரையில் 95 வயதிலும் குஸ்தி சண்டை போடும் பழனி தாத்தா, குஸ்தி கலைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ஏராளமான இளைஞர்களுக்கு இந்த கலையை கற்றுக்கொடுக்கிறார். மதுரை பழங்காநத்தம் தேகப்பயிற்சிசாலையில் தொடை தட்டியபடி குஸ்தி சண்டை போடும் வி.கே.பி. பழனி தாத்தாவுக்கு 95 வயது. அவருடன் சரிநிகர் சமமாக மோதும் ராமு தாத்தாவுக்கு 85 வயது.

இளம் மாணவர்களின் கரகோ‌ஷங்களுக்கு மத்தியில் வயோதிக இளைஞர்களின் சண்டை ஆச்சரியப்பட வைக்கிறது.

குஸ்தி பயிற்சி முடித்து விட்டு திரும்பிய பழனி தாத்தாவிடம் பேசியபோது,

“எனக்கு சிறுவயது முதலே குஸ்தியில் ஆர்வம் அதிகம். இதனால் கடந்த 1956-களில் சக நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்சி கூடம் ஆரம்பிக்க வேண்டி, 26 சென்ட் நிலம் வாங்கினோம். இங்கு ஒருசில உபகரணங்கள் வாங்குவதற்காக, 8 சென்ட்டை விற்க நேரிட்டது.

நான் எண்ணற்ற வடஇந்திய வீரர்களுடன் குஸ்தி சண்டை போட்டு ஜெயித்து உள்ளேன். அவர்கள் கொஞ்சம் நூதனமாக சண்டை போடுவார்கள்.

அவர்களின் வித்தையை சிறிதுநேரம் உன்னிப்பாக கவனித்தால் போதும். அவர்களை நம்ம ஊர் ஸ்டைலில் அப்படியே அலேக்காக தூக்கி வாரி போட்டு விடுவேன்.

நாங்கள் இப்போது நடத்தி வரும் இந்த உடற்பயிற்சி கூடம் யாருக்கும் சொந்தம் இல்லை. ஒரு டிரஸ்ட் மாதிரி உருவாக்கி செயல்பட்டு வருகிறோம்.

இங்கு மாஸ்டர் என்று யாரும் கிடையாது. எங்களுக்கு தெரிந்த- நாங்கள் கற்று தேர்ந்த வி‌ஷயங்களை இளைய தலைமுறையிடம் பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் புதிய மாணவர்களுக்கு சொல்லி தருகிறார்கள்.

எங்களின் மாணவர்கள் வெளியூர் போட்டிகளில் கோப்பை வென்று உள்ளனர். எங்களின் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் மாணவர்கள் மது அருந்தக் கூடாது; புகைபிடிக்க கூடாது என்று ஒருசில கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு பெரிய எந்திரங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் கிடையாது. ஆனால் உடம்பை பலமடங்கு வலுவாக்கும் பலவித பயிற்சிகள் இங்கு உண்டு.

எங்களின் உடற்பயிற்சி கூடத்தில் குஸ்தி தவிர மண் வெட்டுவது, கல் தூக்குவது, தண்ணீர் தொட்டியில் மூச்சடக்குவது, தென்னை மரம் ஏறுவது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் தரப்படுகிறது.

அதனால் தான் எங்களின் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து நிறைய பேருக்கு காவல்துறை, ராணுவத்தில் வேலை கிடைத்து இருக்கிறது.

குஸ்தி பயிற்சி செய்வதால் உடல் வலுவாகும். யாரையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும். நான் 95 வயதிலும் ஆரோக்கியமாக உள்ளேன். இதுவரையில் எனக்கு எந்த நோயும் வந்தது இல்லை.

என் வயதில் நிறைய பேர், இன்றைக்கு உயிரோடு இல்லை. ஆனால் நான் இன்னும் உடல் வலுவுடன் உள்ளேன் என்றால், அதற்கு குஸ்தி தான் முக்கிய காரணம். என்னால் இளைய தலைமுறைக்கு நிகராக இப்போதும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க முடியும்.

தினந்தோறும் நூற்றுக்கணக்கில் தண்டால் போடா விட்டால், எனக்கு தூக்கம் வராது. அப்போது முட்டையின் வெள்ளைக்கருவை உளுந்துமாவு- நல்லெண்ணையில் பிசைந்து, 500 தண்டாலுக்கு 2 உருண்டை வீதம் சாப்பிடுவேன். அதனால்தான் என் உடம்பு இன்னும்கூட கட்டுமஸ்தாக உள்ளது’’ என்று மார்பில் தட்டி, மாணவர்களை உற்சாகப்படுத்துகிறார் பழனி தாத்தா.