Aug 11

கனடா நாட்டு குடியிருப்பு பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு - 2 போலீசார் உள்பட நால்வர் பலி

கனடா நாட்டின் நியூ புருன்ஸ்விக் மாகாணத்திற்குட்பட்ட பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கனடா நாட்டின் கிழக்கு பகுதியில் நியூ புருன்ஸ்விக் என்னும் கடலோர மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திற்குட்பட்ட  பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்ப பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை சுமார் 5.30 மணி) துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.

இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டின் கதவுகளை தாழிட்டுகொண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்துவந்த போலீசார், அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.