Aug 11

4 வது நாளாக தொடரும் தொடரந்து பணியாளர்களின் போராட்டம்

தொடருந்து பணியாளர்களின் போராட்டம் இன்று 4 வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடருந்து இயந்திர இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.இன்றைய தினத்தில் எந்தவொரு தொடருந்தும் சேவையில் ஈடுபடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேதன சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதனை நிறுத்திவைத்துள்ளமைக்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பணிப்புறக்கணிப்பில் நேற்றைய தினம்வரை சில விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், இன்றைய தினத்தில் இருந்து அலுவலக பணியாளர் தொடருந்துகளும் சேவையில் ஈடுபடாதென தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் அறிவித்திருந்தன.

எவ்வாறெனினும், அனுமதி வழங்கப்படும்பட்சத்தில் எந்தவித சிக்கல்களும் இன்றி சேவையை முன்னெடுக்க தயாராக இருப்பதாக தொடருந்து செலுத்துனர்களின் உதவியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது