Aug 10

மாமாங்கேஸ்வரர் இரதோற்சவம்: பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்பு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் இன்று இரதோற்சவம் நடைபெற்றது.

இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் உருவாக்கப்பட்டு அண்மையில் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதன் இரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மேலும் விநாயகர், கொடிக்கம்பம், பஞ்சமுக விநாயகர் மற்றும் வசந்த மண்டபம் ஆகியவற்றுக்கு  விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள் மற்றும் ஆண்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இராமபிரனால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக் கேணியைக்கொண்ட பெருமையினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்து வருகின்றது.

இந்தவகையில் இவ்வாலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை காலை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.