Aug 10

விஜயகலா விசாரணை அறிக்கை சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற வகையிலான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் காவல்துறை விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதே காவல்துறையினர் இதனை அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 59 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் காவல்துறையினர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

6 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 14 அரச அதிகாரிகளும் 30 ஊடகவியலாளர்களும் இந்த வாக்குமூலம் பெற்றவர்களுள் அடங்குவதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபர் ஆலோசனைகளை வழங்கும் வரை இந்த வழக்கு விசாரணைகளுக்கான திகதியொன்றை அறிவிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சம்பவம் தொடர்பான விசாரணை முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.