Aug 09

ஸ்பெயினில் தொடரும் காட்டுத்தீ! – நச்சுப்புகை தாக்கும் அபாயம்!

ஸ்பெயினின் தென்மேற்குக் கரையோர பகுதியிலுள்ள வெலென்சியாவில் தொடர்ந்துவரும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட நச்சுப் புகைமூட்டம் காரணமாக 2500இற்கும் மேற்பட்ட மக்கள் அதனைச் சூழ்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையிலிருந்து கட்டுப்படுத்த முடியாத வகையில் ஸ்பெயினின் லுட்ஸ்சென்ட் மலைப் பகுதியில் காட்டுத் தீ சுடர்விட்டு எரிந்து வருகின்றது. இந்நிலையில், தீயினால் உண்டான புகை மண்டலமானது சுவாசத்திற்கு ஏதுவானதல்ல என்பதால் அப்புகை கலந்த காற்று வீசும் பகுதியிலுள்ள சுமார் 2500இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த காட்டுத்தீ படர்ந்து வரும் பகுதியில், 600இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் மற்றும் 25 விமானங்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காட்டுத்தீயினால் சுமார் 2700 ஹெக்டேயர் அளவான நிலப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.