Mar 14

பார்வையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத கரடி

லாவோஸிலிருந்து வியட்நாமுக்குச் செல்லப் பிராணியாக அழைத்து வரப்பட்டது டோர்லே கரடி. 4 வயதானபோது உரிமையாளர்களைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் சிறிய கூண்டுக்குள் கரடியை அடைத்து வைத்துவிட்டனர்.

தூங்கும் நேரம் தவிர்த்து, கூண்டிலிருந்து வெளியே வருவதற்காகக் கம்பியை எப்பொழுதும் கடித்தபடியே இருக்கும் டோர்லே. இதனால் கரடியின் பற்களும் ஈறுகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அனிமல்ஸ் ஏசியாவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் டோர்லேவை மீட்டு, தங்கள் சரணாலயத்துக்கு அழைத்துவந்தனர். சிகிச்சையளித்து, இயற்கையான சூழலில் வசிக்கவிட்டனர். அதற்குப் பிறகு டோர்லேவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை குறைந்து, 10 வயதில் முழுப் பார்வையையும் இழந்துவிட்டது.

"பார்வை முற்றிலும் இழந்தாலும் டோர்லே அதற்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. பார்க்கும் திறன் குறைந்து வரும்போதே, மற்ற புலன்களை அதிகம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்த டோர்லே, பார்வையிழந்த பிறகு ‘டிராமா ராணி’ என்று பெயர் வாங்கிவிட்டது. எதையும் பார்க்க இயலாததால், அதைச் சரிகட்டும் விதத்தில் அடிக்கடி உரக்கக் குரல் கொடுக்கும். அழ ஆரம்பித்துவிடும்.

அருகில் சென்று குரல் கொடுத்தால் அமைதியாகிவிடும். காட்டில் உள்ள மூங்கில்களை உடைத்து விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பிறந்ததிலிருந்து டோர்லே மிகக் குறைவாகவே மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறது. அதனால் டோர்லேவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் நாங்கள் தனிக்கவனம் செலுத்திவருகிறோம். மீதி இருக்கும் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழிக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்” என்கிறார் அனிமல்ஸ் ஏசியா அதிகாரி க்வைன்.