Jun 03

மஞ்செஸ்டர் தாக்குதலில் காயமடைந்தோரை நேரில் சந்தித்தார் இளவரசர் வில்லியம்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மஞ்செஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த திடீர் விஜயத்தை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,  இந்த   தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு தகுந்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொண்ட மஞ்செஸ்டர் பொலிஸாரையும் அவர் சந்தித்துள்ளார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு அதில் உயிரிழந்தவர்களுக்காக மஞ்செஸ்டர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் வில்லியம் கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த புத்தகத்தில், “மஞ்செஸ்டர் மக்களின் பலம் மற்றும் ஒற்றுமை என்பன உலக மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் நடத்தப்பட்ட குறித்த குண்டுத் தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு 64பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.