Aug 08

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ப.சிதம்பரம் அஞ்சலி

சி.ஐ.டி காலனி இல்லத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவருமான ப.சிதம்பரம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர். அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில், சிஐடி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு முன்னாள் நிதி மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.