Jun 03

பெல்ஜிய மற்றும் சீனப் பிரதமர்கள் பேச்சுவார்த்தை

பெல்ஜிய பிரதமர் சார்ல்ஸ் மிச்செல் (Charles Michel) மற்றும் சீனப் பிரதமர் லீ கெக்கியாங் (Li Keqiang) ஆகியோர் பெல்ஜியத் தலைநகர் பிரஸ்சல்ஸில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து விலகுவது என உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த  சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சீனப் பிரதமர் லீ, “பரிஸினால் முன்வைக்கப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நான் ஐரோப்பிய தலைவர்களிடம் நிலையான பேச்சுவார்த்தையை பேணி வருகின்றேன்” என தெரிவித்தார்.

மின்னுற்பத்தி, போக்குவரத்து, வேளாண்மை மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றின் பொருட்டு வணிகங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதோடு புவி வெப்பமடைதலையும் ஏற்படுத்துகின்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ட்ரம்பின் வாதம் சரியானது எனக் கருதும் சிலர், மேற்குறித்த தகவல்கள் வெறும் கட்டுக்கதை எனவும் அவை வணிகங்களை பாதிக்கும் எனவும் நம்புகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.