Mar 14

தென் கொரியாவில் ஆளில்லா விமானங்களை ஈடுபடுத்த முடிவு

வட கொரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக, தென் கொரியாவில் ஆளில்லா விமானங்களை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் கொரியாவில் அமெரிக்க ஆளில்லா விமானங்களை நிரந்தரமாக நிறுத்த பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்க விமானப் படை, தென் கொரிய பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் "கிரே ஈகிள்' ரக ஆளில்லா விமானங்கள் தென் கொரியாவில் ஈடுபடுத்தப்படும். அவை தென் கொரியாவில் உள்ள குன்சான் போர் விமான தளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறுத்தப்படும்.

தென் கொரியாவில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்குப் பாதுகாப்புத் தகவல்கள் சேகரிப்பது, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அந்த ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படும். தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அவை இருக்கும் என்றார்.

வட கொரியாவின் அச்சுறுத்தல் காரணமாக, தென் கொரியாவில் ஏவுகணைத் தடுப்பு தளவாடங்களை அமைக்க அமெரிக்கா அண்மையில் முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து இப்போது ஆளில்லா விமானங்களை நிறுத்த முடிவாகியுள்ளது.