Aug 06

மண்ணைத் தோண்டியவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி?

அம்பாறை திருக்கோவில் பகுதியில் நிலத்தைத் தோண்டிய சந்தேகிகள் சிலர் அவ்விடத்தில் எதனையோ பார்த்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேகிகள் அந்த இடத்தில் தமது JCB ரக மண்வாரியை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வயல் காணியொன்றில் மேற்படி மண்வாரி ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது.

அதன் பிரகாரம் அவ்விடத்தைச் சுற்றிவளைத்த பொலிஸார், அந்த மண்வாரியை மீட்டனர். அந்த மண்வாரி யாருக்குச் சொந்தமானது என்ற தகவல் கிடைக்கவில்லையாயினும் அவர்கள் இதனை எதற்காக கைவிட்டுச் சென்றனர் என்பது தொடர்பில் தாம் தேடிவருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த இடத்தில் ஏதாவது புதையல் இருக்கலாம் என்ற சிந்தனையில் அந்தச் சந்தேக நபர்கள் அவ்விடத்தைத் தோண்டியிருக்கலாம் என்றும் அப்போது அங்கு எதையாவது கண்டுவிட்டு அவர்கள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.