Mar 14

ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த சி.ஐ.ஏ.க்கு அதிகாரம்

பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நிகழ்த்த அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

முந்தைய ஒபாமா ஆட்சியின்போது பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா விமானங்களை ஈடுபடுத்த பாதுகாப்புத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உளவுத் தகவல்கள் சேகரிக்க மட்டும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் புதிய கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைப் பூண்டோடு அழிப்பேன் என்று அவர் கூறி வருகிறார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களைப் புதிய வழிமுறைகளில் பின்பற்றும் அதிகாரங்களை மறு ஆய்வு செய்தார்.

அதன்படி, வெளிநாடுகளில் பயங்கரவாத நிலைகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்த சி.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் பதுகாப்புத் துறைக்கு மட்டுமே அந்த அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

அதே வேளையில், ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபரின் உத்தரவுப்படி, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையில், பாதுகாப்புத் துறையின் முழுமையான உத்தரவுக்கு காத்திராமல், ராணுவத்தினரே நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அதிபர் வழங்கியுள்ளார்.

டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு தலைமையகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி சென்றார். அங்கு மூத்த அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சி.ஐ.ஏ. தலைமையகத்துக்கு டிரம்ப் சென்ற சில நாட்களுக்கு உள்ளாகவே, ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த சி.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் அளித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சி.ஐ.ஏ.வுக்குத் தாக்குதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக வெளியான செய்தியை உறுதி செய்யத் தொடர்பு கொண்டபோது, அதிபர் மாளிகை செய்தித் தொடர்பு பிரிவும், சி.ஐ.ஏ. அமைப்பும் பதில் கூற மறுத்துவிட்டன.

ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றபோது தொடக்கத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கும் அதிகாரம் சி.ஐ.ஏ.வுக்கு இருந்தது. அவை மூலமாக பெரும்பாலும் பாகிஸ்தானில்தான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

அந்த தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளே அறிவித்து வந்தனர். அல்-காய்தா, தலிபான் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலமான வான்வழித் தாக்குதல்களில் கடந்த ஜன. 21-ஆம் தேதி வரையிலான மொத்த பலி எண்ணிக்கை 1,904 ஆகும். இந்த நிலையில், ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின் கடைசி எட்டு மாத கால அளவில் பாகிஸ்தானில் சி.ஐ.ஏ.வின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது, ஆளில்லா விமானத் தாக்குதல் நிகழ்த்தும் கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் புகலிடம் கிடைத்து வளர்ச்சி அடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.