Aug 04

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தா? தடுப்பதற்கான வியூகத்தில் அமெரிக்கா!?

ஸ்ரீ லங்காவின் அடுத்த அரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபே ராஜபக்ச போட்டியிடுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகையான திவயின இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரான, முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகமவை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விடவும், பரணகம அறிக்கையில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் நீதியரசர் பரணகமவை சந்தித்த தூதகர அதிகாரிகள், கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீண்டநேர பேச்சை நடத்தியிருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளை வான் கடத்தல், போர்க் குற்றச்சாட்டு, விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளை அடைத்துவைத்து சித்திரவதைப்படுத்திய விவகாரம் போன்ற விடயங்களை முன்வைத்து கோட்டாபே ராஜபக்ச போட்டியிடுவதிலிருந்து தடுக்க முடியும் என்ற கோணத்தில் தூதரக அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செய்தி தொடர்பாக முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகமவை ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு தொலைபேசி ஊடாக வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த பத்திரிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவித்தார்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் தன்னை சந்தித்ததை ஏற்றுக்கொண்ட அவர், கோட்டாபே ராஜபக்ச தொடர்பான எந்தவொரு விடயமும் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கிலிருந்து அனைத்து படை முகாம்களையும் 45 தினங்களில் அகற்றுவதற்கான கட்டளையை அரசாங்கம் இராணுவ உயர்பீடத்திற்கு பிறப்பித்திருந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான திவயின பத்திரிகையின் தலைப்புச் செய்தி அமைந்திருந்தது.

இருந்த போதிலும் அந்த செய்தியை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஸ்ரீலங்கா இராணுவமும் முற்றாக நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.