Aug 04

மேற்கு வங்காளத்தில் இன்று மற்றும் நாளை கருப்பு தினம் அனுசரிப்பு - திரிணாமூல் காங்கிரஸ் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநில சில்சார் விமான நிலையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ’அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

இதற்கிடையே, 6 எம்.பி.-க்கள் உள்பட 8 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழு அந்த மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் கள நிலவரத்தை பார்வையிடச் சென்றது. ஆனால், நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சில்சார் விமான நிலையத்திலேயே  அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

அரசு பிரதிநிதிகளை அஸ்ஸாம் போலீஸார் இவ்வாறு கையாண்ட விதம் கண்டிக்கத்தக்கது. எம்.பி.யாக, அவர்களுக்கு இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கும் செல்ல அனைத்து உரிமைகளும் உள்ளது. 

இருந்தும் அனைத்து விதிகளையும் மீறி எங்கள் கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்.பி.க்களை நடத்திய விதம் அவமானத்துக்குரியது. 

இதைக் கண்டித்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாநிலம் முழுவதும் கருப்பு தினம் கடைப்பிடிக்க உள்ளோம்’ என பார்த்தா சாட்டர்ஜி கூறினார்.