Aug 04

கிரிக்கெட் ஓய்வினை அறிவிக்க சந்தர்ப்பம் கோரும் லசித் மாலிங்க

தனது வெளிப்படையான நேரடியாகப் பேசும் தன்மையையும் தன்னை இலங்கை அணிக்காக தொடர்ந்து தேர்வு செய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமென மனவருத்தத்துடன் தெரிவிக்கின்ற இலங்கை அணியின் நட்சத்திரவேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க,நேரம் வரும்போது நிச்சயம் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வினை அறிவிப்பேன் என தனது எதிர்கால நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் லசித் மாலிங்க தேர்வு செய்யப்படாமையைத் தொடர்ந்து விரைவில் லசித் மலிங்க ஓய்வை அறிவிக்கப் போகின்றார் என்று தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறித்த கருத்தை ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான 34 வயதாகும் லசித் மாலிங்க கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரராவார். முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸுக்குப் பிறகு பந்து வீச்சாளராக இலங்கை அணிக்கு அதிகளவு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த வீரராகவும் அவர் விளங்குகிறார். அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ரி 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு முதற் தடவையாக பெற்றுக்கொடுத்த இலங்கை அணியின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

அதுமாத்திரமன்றி, ரி -20 போட்டிகளில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொண்ட ஒரே யொரு இலங்கை வீரரும் மாலிங்கதான்.

அந்தவகையில், இலங்கையின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் லசித் மாலிங்க தெரிவுசெய்யப்படாதது ஆச்சரியம் அளிக்கப்படாவிட்டாலும், தென்னாபிரிக்காவுடனான டி-20 சர்வதேசப் போட்டியில் லசித் மாலிங்க இடம்பெறுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு கடந்தவாரம் மாலிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் தனது ஓய்வு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைககள் குறித்தும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் அங்குகருத்து வெளியிடுகையில், இலங்கையின் ஆடுகள பராமரிப்பாளர்களை கடந்த வருடம் நான் விமர்சித்ததுதான் இலங்கை அணியில் என்னை தேர்வுசெய்யப்படாமல் இருப்பதற்கான முக்கியகாரணம் என நம்புகின்றேன். ஆனாலும், என்னுடைய திறமைகளை நான் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுவந்தேன். எதற்காக எனக்கு ஏன் தொடர்ந்து ஓய்வளிக்கப்பட்டுவருகின்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

அத்துடன், உள்ளுர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி நல்லபோர்மில் இருந்தாலும், போட்டியொன்றுக்கு தேவையான அழுத்தத்தை என்னால் கொடுக்க முடியாமல் இருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அணித் தேர்வுகள் இடம்பெறும் போது திறமைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்பட்டால் டி-20 போட்டிகளுக்குஎன்னைத் தான் முதல் வேகப்பந்து வீச்சாளராக தெரிவுசெய்யவேண்டும்.

எனது திறமை தான் எனக்கு பலம். ஒருநாள் அரங்கில் 301 விக்கெட்டுக்களையும், 101 டெஸ்ட் விக்கெட்டுக்களையும், 90 டி-20 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளேன். இந்த அனைத்து விக்கெட்டுக்களையும், எனது தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்புடனும், தியாகங்களுக்கு மத்தியிலும் பெற்றுக்கொடுத்தேன். மீண்டும் மீண்டும் பலதடவைகள் என்னை நிரூபித்துவிட்டேன்.

அத்துடன், சம்பியன்ஸ் கிண்ணத் தோல்வியினை அடுத்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் வீரர்களின் உடற் தகுதிகுறித்து வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு மாலிங்க ஆவேசமாகபதில்களை அளித்து கடும் சர்ச்சைகளுக்கும் முகங்கொடுத்தார்.

எனவே, தனதுவெளிப்படையான நேரடியாகப் பேசும் தன்மையையும்,தான் அணியில் தேர்வுசெய்யப்படாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்கலாமெனவும் லசித் மாலிங்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முற்பகுதியில் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாலிங்க கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வுபெற்றார். எனினும், கடந்த வருட முற்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கியதுடன், கடந்தவருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், கடந்தவருடம் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணகிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்தார்.