Aug 03

ஒன்ராறியோவின் வடகிழக்கில் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள கனத்த புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளமை காரணமாக அப்பகுதியிலுள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக Parry Sound பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவிவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள மக்கள், தங்களது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை பொதிசெய்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

தமது வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை கடுமையான புகை சூழ ஆரம்பித்துள்ளமையால், கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக, அங்கிருந்து வெளியேறிவரும் மக்கள் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பித்த காட்டுத்தீ, தற்போது வரையில் 100 சதுரக் கிலோமீட்டருக்கும் அதிகமான வனப்பகுதியை நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அந்த காட்டுத்தீயானது ட்ரான்ஸ் கனடா(Trans-Canada) நெடுஞ்சாலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அது வேகமாக பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 500 இற்கும் அதிகமான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.