Aug 03

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளின் 28ம் நினைவு

124 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்து இன்று விசேட பிரார்த்தனை

1990ம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான காலப்பகுதியாகும். யுத்தமேகங்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சூழ்ந்திருந்த காலம் அது. மரண அச்சமும் பீதியும் நிறைந்து காணப்பட்ட ஒரு காலப்பகுதியாக 1990ம் ஆண்டு காலப்பகுதியை நாம் பார்க்கலாம்.

பல தசாப்தங்களாக இருந்து வந்து தேசிய நல்லிணக்கம், இன நல்லுறவு, சமூக ஒற்றுமை அனைத்தும் சீர்குலைந்து இன முரண்பாடு உக்கிரமாக இருந்த காலகட்டமாக இந்தக் காலப்பகுதியை கூறமுடியும்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை,தமிழ்க் கிராமங்கள் எரிக்கப்பட்டமை, கிழக்கிலும் பல முஸ்லிம் கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தமை, தமிழ் மக்கள் அகதிமுகாம்களில் வைத்து பெருமளவில் படுகொலை செய்யப்பட்டமை, முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அச்சம் என்றெல்லாம் ஏட்டிக்குப் போட்டியாக குரூரத்தனமான சம்பவங்கள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன.

இந்தக் காலப்பகுதியில்தான் காத்தான்குடி பள்ளிவாசலில் படுகொலைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ்கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிமார்களும் அவர்களோடு வந்த உறவினர்களும் இன்னும் சில பொதுமக்களும் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலரும் அடங்குகின்றனர்.புலிகளே இப்படுகொலைகளைப் புரிந்தமை வெளிப்படையான விடயமாகும்.

இந்தக் கடத்தல் சம்பவம் இனநல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மற்றொரு மிக மோசமான மிலேச்சத்தனமான சம்பவமாக பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 124 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பள்ளிவாசலுக்குள்ளேயே 103 பேரும் பின்னர் 21 பேருமாக 124 பேர் இதில் படுகொலை செய்யப்பட்டனர்.

03.08.1990 இரவு இவ்விரண்டு பள்ளிவாசல்களிலும் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் துப்பாக்கிச் சூடுகளினால் 103 முஸ்லிம்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத்தாக்குதலையும் நடத்தினர். இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது.புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர்.

தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாக செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக பலர் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாயல் எங்கும் இரத்த ஆறு, மரண ஓலங்கள்... தந்தை, மகன், ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று சகோதரர்கள், உறவினர்கள் என்றெல்லாம் உறவுமுறையான பலரும் இதில் உயிரிழந்ததுடன் இன்னும் சிலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட புலிகள் தப்பித்துச் சென்றதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இவ்விரண்டு பள்ளிவாயலையும் நோக்கி சென்று உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரையுமே காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து காயமடைந்வர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பினர். காயமடைந்த சிலர் மட்டக்களப்பிலிருந்து இலங்கை விமானப்படையினரின் விமானத்தின் மூலம் அம்பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பமே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டது. இளம் வயதில் வித​ைவகளான பல பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற சிலர் இன்றும் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.

இச்சம்பவத்தில் ஊனமுற்று வாழும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "1990ம் ஆண்டு ஓகஸ்ட் 3ம் திகதி எனது தாயைப் பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. 58 நாட்கள் நிரம்பிய குழந்தையும் எனக்கிருந்தது.

அப்போது பள்ளிவாசலில் தொழுக்காக அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகிய போது எனது தாய் 'தொழுகை ஆரம்பமாகி விட்டது அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள்' என அனுப்பினாள். அப் போது நான் மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு வந்தேன். பள்ளிவாசலின் முன்வளவில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதைக் கண்டேன். அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழூ செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுகையில் இணைந்து சுஜூது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன். நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன். எனது வயிற்றுப் பகுதியில் சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததை கண்டேன்.

சில நிமிடங்களின் பின்னர் நான் உட்பட காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டோம். அங்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஊனமுற்றவராக வாழ்ந்து வருகின்றேன்.இந்த சம்பவத்திற்கு முன்னர் சுயமாக தொழிலில் ஈடுபட்டு தொழிலில் முன்னேற்றமாக காணப்பட்ட நான் இன்று பாரிய தொழில் எதுவும் செய்ய முடியாதவனாக இருக்கின்றேன்" என்கிறார்.

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்பது இலங்கைவாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. ஆண்டு தோறும் ஓகஸ்ட் 3ம் திகதி ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் படுகொலை இடம்பெற்ற இரண்டு பள்ளிவாயல்களிலும் குர்ஆன் ஓதுதல், விஷேட பிரார்த்தனை உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

2004ம் ஆண்டு நடைபெற்ற ஷுஹதாக்கள் தினத்தின் போது காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை மற்றும் ஏறாவூர் படுகொலைச் சம்பவம் உட்பட முஸ்லிம்கள் மீதான படுகொலைகளின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக தேசிய ஷுஹதாக்கள் தினத்தை ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் பிரகடனம் செய்திருந்தது.

கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவமும் ஒரு மிகப் பெரிய சான்றாகும்.

இலங்கையில் இன முரண்பாட்டைக் களைந்து நாட்டைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.