Aug 02

தாய்ப்பாலின் மகத்துவத்தை வலியுறுத்தும் தாய்ப்பால் தினம்!

உலக தாய்ப்பால் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.


குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஒகஸ்ட் மாதம் 1ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் ஒவ்வொரு தாய்மாருக்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் ஒகஸ்ட் 7ம் திகதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகிறது.

உலகில் கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு, குழந்தைகளுக்கான தாய்ப்பாலாகும்

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தாய்ப்பால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தாய்ப்பாலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் படைத்த ரசாயனப் பொருள் இருக்கிறது. அது பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களை பாதுகாக்கவும் குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது.

தாதுப் பொருள் குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்குச் சுரக்கின்ற சீம்பாலில் அதிக அளவில் இருக்கிறது.

இது குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

குழந்தை இனிமேல் சாப்பிடப் போகும் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகிறது.

ஆகவே எல்லாவித சத்துக்களும் அடங்கிய பால் குழந்தையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

தாய் பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளரமுடியும் காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன். புதிதாக பிறந்த குழந்தை ஒன்றிற்கு 6 மாதங்களுக்காவது தாய் பாலூட்ட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தான் மிகக் குறைவாக தாய்ப்பாலூட்டுகின்றனர். அமெரிக்கா முழுவதும் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்க பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பாடுபடுகின்றன.

டெக்சாஷ் மாகாணத்தில் பாலூட்டுவதற்காக தாய்மார்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டுமெனச் சட்டம் உள்ளது.

உலக தொழிலாளர் நிறுவனமானது வேலை நாட்களில் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு முறையோ இரு முறையோ அரை மணி நேரம் பாலூட்டும் நேரமாக அங்கீகரித்துள்ளது.

மேல்நாட்டில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பால் தானமும் உயிர் காக்கும் செயலாகக் கருதப்படுகிறது. சேமிக்கப்பட்ட தாய்ப்பால் அநாதைக் குழந்தைகளுக்கும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.