Aug 02

அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள சிம்பாப்வே தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிம்பாப்வே தேர்தலில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

ஊடகங்களின் மாறுபட்ட நிலைப்பாடு, வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் தேர்தல் ஆணையகத்தின் மீதான அவநம்பிக்கை என பல குளறுபடிகள் நிறைந்து காணப்பட்டதாக குறித்த குழுவின் தலைமை கண்காணிப்பாளர் எல்மர் புரோக் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியமானது. தேர்தல் தினத்தன்று எந்தவித வன்முறைகளும் இடம்பெறவில்லை. எனினும், பல வாக்குச்சாவடிகளுக்கு வெளியில் வாக்காளர்கள் பலர் அச்சுறுத்தப்பட்டனர். ஆளுங்கட்சியினராலேயே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மிகவும் மோசமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. வாக்குச்சீட்டுகளின் மாதிரிகள் அச்சிடப்பட்டன. வாக்காளர்களை சிலர் கட்டுப்படுத்தி வந்தனர். ஊடகங்களும் தமது பங்கை சரியாக செய்யவில்லை. ஆளுங்கட்சிக்கு சார்பாகவே அரச ஊடகங்கள் செயற்பட்டன. தேர்தல் முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையகம் தாமதித்தது. இதற்கான காரணம் குறித்து கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவு எவ்வாறான நம்பகத்தன்மையை ஏற்படுத்துமென கூற முடியாது” என்றார்.

சிம்பாப்வே தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் கடந்த 2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். சர்வதேச முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள சிம்பாப்வேயிற்கு, இத்தேர்தலின் ஊடாக அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும், தற்போதைய சூழ்நிலை இதற்கு வழிவகுக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.